தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ. சிதம்பரனார் திருவுருவச் சிலை அமைந்துள்ள பகுதியில், முறையான பராமரிப்பு இன்றி கழிவுநீர் தேங்கியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராகவேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிலையின் நுழைவு வாயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் வெளியேற வழியின்றி அடைப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, டெங்கு போன்ற நோய்த்தொற்றுகள் பரவும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.
தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்த வ.உ.சியின் நினைவிடமே இவ்வளவு மோசமான நிலையில் இருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இந்த விவகாரத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, அந்த இடத்தை முறையாகச் சீரமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.




