30 ஆண்டுகளுக்கு முந்தைய அதிரடி அரசியல் ஆரம்பிக்கப்படும் என தி.மு.க., பொதுக் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி மிரட்டல் விடுத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் தி.மு.க., வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் தமிழகம் தலைகுணியாது என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினரும், மேயருமான ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் அவர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூத்துக்குடி சட்டசபை தொகுதியில் பா.ஜ., திட்டமிட்டு 100 தெருமுனை பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த கூட்டத்தில் பேசும் நபர்கள் அனைவரும் முதல்வர், துணை முதல்வர், கனிமொழி எம்.பி., மற்றும் தி.மு.க., ஆட்சி குறித்து அவதுாறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் இவ்வாறு பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்தால்தான் நமது இலக்கை அடைய முடியும்
மாநகராட்சி மேயராக இருந்த சசிகலா புஷ்பா குடிநீர் திட்டத்தில் முறைகேடு செய்தவர். மாநகராட்சி நிர்வாகம் குறித்து அவர் தேவையில்லாத கருத்துகளை தெரிவித்துள்ளார்.
முன்னாள் மேயராக இருந்த அந்தோணி கிரேசி வேலைக்கு பணம் பெற்றுக் கொண்டு எந்த பணியும் செய்யாமல் இருந்தார். தேர்தல் நெருங்கி வருவதால் தற்போது தங்களை முன்னிலை படுத்த வேண்டும் என ஆட்சி குறித்தும், மாநகராட்சி குறித்தும் தேவையில்லாத கருத்துகளை பேசி வருகின்றனர்.
தமிழகமும், துாத்துக்குடி மாநகராட்சியும் இந்த ஆட்சியில் எவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளது என மக்களுக்கு தெரியும். நாம் அனைவருமே பிரச்சார பீரங்கிதான். ஆட்சி குறித்து தவறான கருத்துகளை பேசுபவர்கள் நிறுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்த அதிரடி அரசியல் ஆரம்பிக்கப்படும்.
யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. அமைதியாக சென்று கொண்டிருக்கிறோம் என நினைக்க வேண்டாம். அவதுாறு கருத்துகளை தெரிவிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அதற்காக அவர்களிடம் சென்று சண்டை போட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, பா.ஜ., எழுப்பிய கேள்விக்கு நேரடி பதில் அளிக்க முடியாத நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமேடையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் மிரட்டல் விடுத்துள்ளார் என அக்கட்சியின் மாவட்டச் செயலர் சித்ராங்கதன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பா.ஜ.,க, வழக்கறிஞர் அணி சார்பில் தென்பாகம் காவல் நிலையத்திலும், அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் சார்பில் மாவட்ட எஸ்.பி., மதனிடமும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



