• vilasalnews@gmail.com

மக்கள் நலனா? அரசு வருவாயா? மேயருக்கு எதிராக தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில் வெடித்த திமுக கவுன்சிலர்களின் விவாதம்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டத்தில், மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி கோரும் தீர்மானத்திற்கு, ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில், திருத்தப்பட்ட வரவு செலவு அறிக்கை மற்றும் அடுத்த ஆண்டிற்கான உத்தேச பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் திருப்திகரமாக இல்லை எனக் கூறி, அதிமுக கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.


அதிமுகவினர் வெளியேறிய பிறகு, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் மாநகராட்சிக்குச் சொந்தமான "டோபிகானா" வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள மூன்று கடைகளை டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்காக வாடகைக்கு விடுவது என்ற தீர்மானம் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இந்தத் தீர்மானம் வாசிக்கப்பட்ட உடனே, அப்பகுதியைச்சேர்ந்த திமுக கவுன்சிலர் கந்தசாமி எழுந்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். அவருக்கு ஆதரவாக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் எழுந்து தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.


ஏற்கனவே ஊருக்குள் இருக்கும் மதுக்கடைகளால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவற்றை அகற்றச் சொல்லி மக்கள் போராடும் நிலையில், மாநகராட்சி நிர்வாகமே தனது கட்டிடத்தில் மதுக்கடைக்கு இடம் ஒதுக்குவது முறையல்ல. இந்தத் தீர்மானத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், என அவர்கள் ஆக்ரோஷமாகப் பேசினார்.


இதற்குப் பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு தரப்பில் கட்டிடம் கேட்கும்போது நாம் மறுக்க இயலாது, என்று விளக்கம் அளித்தார். மேயரின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.


பழைய கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் பலனில்லை; இந்நிலையில் புதிய கடைக்கு அனுமதி வழங்காதீர்கள் என மேயரை நோக்கி கைகூப்பி வேண்டுகோள் விடுத்தனர். ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரின் முடிவை எதிர்த்து நின்ற சம்பவம் தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: மார்ச் 4 உள்ளூர் விடுமுறை - முழு விபரம் உள்ளே!

எடப்பாடியாரின் ஆணை.. சண்முகநாதனின் ஆலோசனை.. தூத்துக்குடியில் திருச்சியின் பிரசாரப் பயணம்!

  • Share on