கன்னியாகுமரியின் அடையாளமாகத் திகழும் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அலங்கார நுழைவு வாயிலை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று வருகை தந்தார். முன்னதாக, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அவர், அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்குச் சென்றார். மாவட்ட எல்லையான 'ஜீரோ பாயிண்ட்' பகுதியில் அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, பழைய பேருந்து நிலைய சந்திப்பில் ரூ. 1.45 கோடி மதிப்பீட்டில் புதிய அலங்காரத் தோரண நுழைவு வாயில் கட்டப்பட்டுள்ளது. இந்த நுழைவு வாயிலை முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்த நுழைவு வாயில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக மிகக் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




