• vilasalnews@gmail.com

முத்து நகரின் முடிசூடா ராணியாகத் தொடர்வாரா கீதாஜீவன்? - ஒரு 'நச்' அரசியல் அலசல்!

  • Share on

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தூத்துக்குடி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் நீடிக்கும் வேளையில், அதிமுக கூட்டணியில் பாஜக , தமாகா போன்ற கட்சிகள் களம் காண உள்ளன. இதற்கிடையே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதால் தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தூத்துக்குடி தொகுதியைப் பொறுத்தவரை, திமுக சார்பில் தற்போதைய அமைச்சரும், கடந்த மூன்று முறை வெற்றி பெற்றவருமான கீதாஜீவன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2006-ல் முதன்முதலில் களம் கண்டு அமைச்சரான அவர், 2011-ல் தோல்வியைத் தழுவினாலும், அதன்பின் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று தொகுதி மக்களுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக, மழைக்காலங்களில் களத்தில் இறங்கி அவர் ஆற்றிய பணிகள் பெண்கள் மத்தியில் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.


மறுபுறம், அதிமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட தமாகாவுக்குப் பதில், இந்த முறை அதிமுக நேரடியாகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வேட்பாளராகக் கருதப்பட்டாலும், மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனின் ஆதரவாளர்கள் தங்களுக்கு வாய்ப்பு கேட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஒருவேளை செல்லப்பாண்டியனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டால், உட்கட்சிப் பூசல் காரணமாக அவருக்கு உள்ளூர் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்களா என்ற சந்தேகம் நிலவுகிறது. 


அதேநேரம், தவெக தரப்பில் வேட்பாளர் தேர்வு குறித்து நிலவும் குழப்பம் அக்கட்சியினரிடையே ஒருவித சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகளவில் இருப்பது திமுக கூட்டணிக்கு ஒரு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது.


கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்பி கனிமொழி மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட புதிய சாலைகள், பூங்காக்கள் மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இது கீதாஜீவனுக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, 2021 தேர்தலில் 49 சதவீத வாக்குகளைப் பெற்று கீதாஜீவன் அபார வெற்றி பெற்றார். 


மேலும், 2024 மக்களவை தேர்தலில் கனிமொழி அவர்கள் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குள் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அதிமுகவை விட சுமார் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டுக்குப் பின் தொகுதியில் 2,48,300 வாக்காளர்கள் உள்ள நிலையில், வலுவான வேட்பாளர் மற்றும் ஆளுங்கட்சியின் சாதகமான அம்சங்களால் தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் தனது வெற்றியைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share on

குமரிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு நினைவு வளைவு திறப்பு!

ஒட்டப்பிடாரத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' பரப்புரை தொடக்க விழா: அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்பு!

  • Share on