தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நடைபெற்ற காதணி விழாவில் ஏற்பட்ட மோதலில், வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியநாயகம் (33). இவர் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற காதணி விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது பெரியநாயகம் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அவருக்கும் அங்கிருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மதிய உணவு அருந்தச் சென்ற இடத்திலும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் இருந்த கும்பல், பெரியநாயகம் எட்டயபுரம் அருகே தனது மினி வேனில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் பெரியநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கு குறித்து வழக்குப்பதிவு செய்த எட்டயபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் கவர்னகிரியைச் சேர்ந்த முனியசாமி (36), பொன் மாடசாமி (26), மாரிச்செல்வம் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்குக் காரணம் என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதற்கிடையில், கொல்லப்பட்ட பெரியநாயகத்தின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, உடலைப் பெற்றுக்கொண்டு அவர்கள் கலைந்து சென்றனர்.



