• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாணவர் மீது சாதிய ரீதியான தாக்குதல் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை என்ன?

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் பள்ளி மாணவர் ஒருவரைச் சாதிய ரீதியாக இழிவுபடுத்தி தாக்கிய விவகாரத்தில், 5 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


முதலூர் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், வாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர் பிளஸ்-1 பயின்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவருக்கும் அதே பள்ளியில் பயிலும் மற்ற சில மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சிறு வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியுள்ளது.


அப்போது, ஒரு தரப்பைச் சேர்ந்த 5 மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவரைச் சாதிய ரீதியாகத் தரக்குறைவாகப் பேசியதுடன், உடல் ரீதியாகவும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காகச் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவரின் தரப்பில் தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனினும், ஆரம்பத்தில் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டியதாகக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் காணொளி வாயிலாக முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, கட்சியின் உயர்மட்டத் தலையீட்டின் பேரில் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்குப் புகார் சென்றது. தட்டார்மடம் ஆய்வாளர் இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட 5 மாணவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். சாத்தான்குளம் ஏஎஸ்பி ஆவுடையப்பன் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  • Share on

அலையில் சிக்கிய 4 லட்சம்.. ஆழ்கடலில் தேடிக் கண்டுபிடித்த அதிசயம்! திருச்செந்தூரில் நடந்தது என்ன ?

காதணி விழாவில் ஏற்பட்ட தகராறில் தூத்துக்குடி வாலிபர் கொலை: 3 பேர் கைது!

  • Share on