கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (பிப்ரவரி 24) தூத்துக்குடி வருகை தருகிறார். அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கத் தயாராகுமாறு திமுக தொண்டர்களுக்கு வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நாளை செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வரும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்வில் கட்சியின் அனைத்து அணிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.



