தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்:-
கொரோனா காலக்கட்டத்தில் கடும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆக்சிஜன் வசதிகள் மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தி பொதுமக்களைக் காத்தது. தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதோடு, வறுமை விகிதம் குறைந்துள்ளது. பெண்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் உயர்ந்துள்ளது. பெண் தொழில்முனைவோருக்கான திட்டங்கள் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு கட்டமைப்புப் பணிகள் சாலை மேம்பாட்டுப் பணிகள், மழைநீர் வடிகால் அமைப்புகள், 210 புதிய மின்மாற்றிகள் நிறுவுதல், மீன்பிடி துறைமுக விரிவாக்கத் திட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைத் தேடி வரும் கட்சிகளை மக்கள் நன்கு அறிவார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஒன்றிய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி திராவிட மாடல் ஆட்சியை ஒடுக்க நினைப்பது நடக்காது என்றார். பிரதமர் திருக்குறள் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் திட்டங்களை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எந்தவித அழுத்தத்திற்கும் அஞ்சப்போவதில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அரியணையில் மக்கள் ஏற்றுவார்கள் என்றார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தின் இறுதியில் அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன் நன்றியுரை வழங்கினார்.



