தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள கட்டுமான வாரியம், அமைப்புசாரா தொழிலாளர் வாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, கடந்த 4 மாதங்களாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியத்தை தமிழக அரசு நிலுவையில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இழுபறி நிலையைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாத ஓய்வூதியத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ₹3,000 ஆக உயர்த்த வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென பிரத்யேக தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும். வாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும்.
கட்டுமான வாரிய உறுப்பினர்களுக்கு வீடு கட்ட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மானியத் தொகையைத் தாமதமின்றி வழங்க வேண்டும். என கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் தர்மா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு எழுச்சித் தொழிலாளர் நலச்சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கண்டன உரையாற்றி கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆறுமுககனி, மனோன்மணி, ஆனந்தபாரதி மற்றும் சின்னத்தாய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். கூட்டத்தின் நிறைவாக வீரலட்சுமி நன்றியுரை ஆற்றினார்.



