• vilasalnews@gmail.com

ரியல் ஹீரோக்களான தூத்துக்குடி போலீஸ்.. 30 நிமிடத்தில் அதிரடி.. பத்திரமாக மீட்கப்பட்ட சிறுவன்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது சிறுவனை இருசக்கர வாகனத்தில் கடத்திய தம்பதியினரை, போலீசார் அடுத்த 30 நிமிடங்களிலேயே மடக்கிப் பிடித்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.


தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமலையன் தெருவில் வசிக்கும் ஒரு மூதாட்டியின் பேரன் (2½ வயது), இன்று அவரது பெட்டிக்கடை அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதியினர், சிறுவனிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் அவனைத் தூக்கிக்கொண்டு தப்பினர்.


இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், அலறல் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உடனடியாக குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.


சார்பு ஆய்வாளர்  ரேணுகா, தலைமை காவலர்கள் ராமச்சந்திரன், செந்தில்குமார் மற்றும் ஜெபக்குமார் உள்ளிட்ட போலீசார் குலசேகரன்பட்டினம் முதல் திருச்செந்தூர் சாலை வரை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோயிலின் அருகே, சந்தேகத்திற்கிடமான வகையில் குழந்தையுடன் சென்ற தம்பதியினரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.


பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த லிங்கதுரை (35) மற்றும் அவரது மனைவி ஜெயந்தி (33) என்பது தெரியவந்தது. அவர்கள் எதற்காகக் குழந்தையைக் கடத்தினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மீட்கப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். தங்களது குழந்தையை விரைவாக மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு பெற்றோரும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.


குழந்தை கடத்தப்பட்ட 30 நிமிடங்களில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டு, சிறுவனை கடத்திய தம்பதியினரை கைது செய்த குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் பாராட்டினார்.

  • Share on

தூத்துக்குடி இளைஞர் ஈராலில் வெட்டிப்படுகொலை : போலீசார் விசாரணை!

தூத்துக்குடியில் பகீர் : குடும்பப் பெண் வேடத்தில் வீட்டில் விபச்சாரம் - போலீசாரின் அதிரடி ரெய்டில் 2 பெண்கள் கைது!

  • Share on