தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அங்கிருந்த இரண்டு இளம்பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக விபச்சாரம் நடப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், காவல் சார்பு ஆய்வாளர் முத்துராஜா, சிறப்புச் சார்பு ஆய்வாளர் மல்லிகா மற்றும் பெண் போலீசார் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது அந்த வீட்டில் நான்கு பெண்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் முனீசுவரி (29) மற்றும் அந்தோணியம்மாள் (39) ஆகிய இருவர் இணைந்து அந்த வீட்டில் மற்ற இரண்டு இளம்பெண்களை ஆசைவார்த்தை கூறி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, விபச்சாரம் நடத்திய முனீசுவரி மற்றும் அந்தோணியம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இரண்டு இளம்பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து 4 செல்போன்கள், 2,000 ரூபாய் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்த தாளமுத்துநகர் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, இந்த கும்பலுக்குப் பின்னால் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




