தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள மதுபான பாரில் சோதனையில் ஈடுபட்ட விவகாரத்தில், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 18-ம் தேதி அதிகாலை, தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள ஒருமதுபான பாரில் சிவில் உடையில் சென்ற போலீசார் பாரின் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டதாகவும், அப்போது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில், போலீசார் தாக்குவது போன்ற வீடியோ வெளியான நிலையில், அதன் முதற்கட்ட விசாரணையில் மனித உரிமை மீறல்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன், ஏட்டு சண்முகநாதன் ஆகியோர் ஆயுதப் படைக்கும், ஏட்டுக்கள் சமியுல்லா, சரவணன் ஆகியோர் முறப்பநாடு காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவிட்டுள்ளார்.
மதுபான பாரில் சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க முயன்று சோதனையிட்ட போலீசாரின் நடவடிக்கையை திசைதிருப்பும் வகையில் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டு சம்பவம் மடைமாற்றப்படுகிறதா? அல்லது சோதனை என்ற பேரில் பார் ஊழியர்கள் மீது வேண்டுமென்றே போலீசார் தாக்குதல் நடத்தினார்களா? என்பது முழு விசாரணையிலேயே தெரியவரக்கூடும்.




