• vilasalnews@gmail.com

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது - ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த கடம்பூர் ராஜூ!

  • Share on

தமிழக அரசியல் களத்தில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்புதான். இந்தச் சந்திப்பு குறித்து அதிமுக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஓபிஎஸ்-ன் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.


சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அவருக்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியைப் பாராட்டியதுடன், மீண்டும் ஸ்டாலினே முதல்வராக வரவேண்டும் எனத் தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். அதிமுகவின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட ஒரு தலைவர், அரசியல் எதிரியான திமுகவின் தலைவரைப் பாராட்டியது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தச் சந்திப்பு குறித்து முதலில் எதிர்வினையாற்றிய அதிமுகவின் பாப்புலர் முத்தையா, ஓபிஎஸ்-ன் இந்தச் செயல் துரோகத்தின் உச்சம் என்று விமர்சித்தார். அதிமுக தொண்டர்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் ஓபிஎஸ்-ஐ கடுமையாகச் சாடினார்.


ஓபிஎஸ் ஸ்டாலினைச் சந்திப்பதோ அல்லது திமுகவில் இணைவதோ அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தான் கண்டனத்திற்குரியது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறார். இதை அவரது மனசாட்சியே ஒப்புக்கொள்ளாது. இப்படிப் பேசியதற்காக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் அவரை ஒருபோதும் மன்னிக்காது.


ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, மூன்று முறை முதல்வராக்கப்பட்டவர் ஓபிஎஸ். 1989-ல் ஜெயலலிதாவிற்கு எதிராகச் செயல்பட்டபோது கூட, அவரை மன்னித்து கட்சியில் உயரிய இடத்தைக் கொடுத்தார் அம்மா. அந்த நன்றியை மறந்துவிட்டு இன்று இப்படிப் பேசுவது முறையல்ல என்றார் கடம்பூர் ராஜூ.


மறுபுறம், திமுகவின் கூட்டணித் தலைவர்கள் இந்தச் சந்திப்பை வரவேற்றுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஓபிஎஸ் நேற்றே திமுகவிற்கு வந்துவிட்டார் என்று சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், திமுக கூட்டணியில் இணைவது குறித்து ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தேர்தல் நெருங்கும் வேளையில், ஓபிஎஸ்-ன் இந்த  நகர்வு தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா சந்தேகமே.

  • Share on

சென்னை செல்ல காத்திருந்தவரை மறித்த மரணம்... கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடந்த விபத்து!

தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் : தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு!

  • Share on