கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது நிகழ்ந்த விபத்தில், சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுமான் (52). இவர் இன்று காலை கோவில்பட்டியிலிருந்து சென்னை தாம்பரம் செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். இதற்காக முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு காத்திருந்துள்ளார்.
காலை சுமார் 10 மணி அளவில், குருவாயூரிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் 'குருவாயூர் எக்ஸ்பிரஸ்' ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடைக்கு வந்து புறப்படத் தொடங்கியது. ரயில் நகரத் தொடங்கிய நேரத்தில், ரகுமான் நடைமேடையின் எதிர்புறமாக தண்டவாளத்தில் இறங்கி ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கால் தடுமாறி தண்டவாளத்திற்குள் விழுந்தார். இதில் ரயிலின் சக்கரம் ஏறியதில் அவரது வலது கால் துண்டானதுடன், இடுப்புக்குக் கீழும் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிருக்குப் போராடினார்.
விபத்தைக் கண்ட அங்கிருந்த பெண் உதவி ஆய்வாளர் செல்வி, உடனடியாக ரகுமானை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் பிரிந்தது.
தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




