தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் இயங்கி வரும் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், இரு பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கழுகுமலையைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர், அப்பகுதியில் தீப்பெட்டி ஆலை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். தீக்குச்சிகளைப் பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருந்த சமயத்தில், எதிர்பாராதவிதமாக தீக்குச்சிகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாகத் தீப்பற்றியது.
இந்த விபத்தில் அத்திகுளம், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த முத்துமாரி (44), கழுகுமலை பகுதியை சேர்ந்த புஷ்பம் (60) ஆகிய இரு பெண் தொழிலாளர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் பயந்துபோன மற்ற தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியேற முயன்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்ததில், லட்சுமி (49) மற்றும் முத்துமாரியம்மாள் (57) ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
தகவலறிந்து வந்த கழுகுமலை தீயணைப்புத் துறையினர், நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையில் நீண்ட நேரம் போராடித் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தீக்குச்சிகள் மற்றும் தளவாடப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் குறித்து கழுகுமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான கூடுதல் காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




