தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் உட்பட இருவரை பன்றி கடித்துக் குதறிய சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எட்டயபுரம் தாலுகாவிற்குட்பட்ட அயன்ராஜாபட்டி ஊராட்சி, கைலாசபுரம் கிராமத்தில் நேற்று காலை விளைநிலங்களில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றது. அப்போது, புதருக்குள் மறைந்திருந்த பன்றி ஒன்று திடீரென ஆக்ரோஷமாக வெளியே வந்து அறுவடையில் ஈடுபட்டிருந்தவர்களைத் தாக்கியது.
நிலத்தின் உரிமையாளர் மூர்த்தி மற்றும் தொழிலாளி லட்சுமி, ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பன்றி கடித்ததில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள முட்செடிகள் நிறைந்த பகுதிகளில் பன்றிகள் கூட்டமாக, குட்டிகளுடன் தஞ்சம் புகுந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இவை விளைச்சலுக்குத் தயாராக உள்ள பயிர்களைச் சேதப்படுத்துவது மட்டுமன்றி, தற்போது வேலைக்கு வரும் தொழிலாளர்களையும் தாக்கி வருவது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெறவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட வேண்டும். விளைநிலங்களில் சுற்றித் திரியும் பன்றிகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் வலியுறுத்தியுள்ளார்.




