தூத்துக்குடியின் அடையாளங்களில் ஒன்றான, வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா பள்ளிவாசல், உலகத்தரம் வாய்ந்த கட்டிடக்கலை அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு நேற்று புதன்கிழமை மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.
பழமை மாறாமல், அதே சமயம் நவீன வசதிகளுடன் இப்பள்ளிவாசலை மேம்படுத்த ஜமாத் தரப்பில் 'மராமத் பணிக்குழு' உருவாக்கப்பட்டது. இஸ்லாமிய பெருமக்களின் நிதி பங்களிப்பு மற்றும் பணிக்குழுவின் சிறப்பான திட்டமிடலால், வெளிநாட்டுப் பள்ளிவாசல்களுக்கு இணையான எழில்மிகு தோற்றத்துடன் இப்பள்ளிவாசல் தற்போது காட்சியளிக்கிறது.
இமாம் அப்துல் கலாம் சதக்கப்பல் துவா ஓதி விழாவைத் தொடங்கி வைக்க, முன்னாள் தலைவர் மீராசா மற்றும் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் ஆகியோர் மிம்பர் மிஹ்ராவினைத் திறந்து வைத்தனர். மோதிய முகமது பைஜான் அவர்களின் கிராத் பாராயணத்தைத் தொடர்ந்து சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்த கட்டிடக் கலைஞர்களுக்கு, பானு பிரிண்டர்ஸ் உரிமையாளர் காஜி மைதீன் அப்துல் காதர் (எ) கனி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
நெல்லை வக்ஃப் வாரிய சூப்பிரண்டு காலித், ஜமாத் நிர்வாகிகள் முகமது ரஃபீக், நஜ்முத்தீன், முகமது உவைஸ், முகமது சலீம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். மேலும், பேராசிரியர்கள், பல்வேறு பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.



