தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகம் அருகே, மாநகராட்சிக்குச் சொந்தமான நிலம் நீண்டகாலமாக ஆக்கிரமிப்பில் இருப்பதாக மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது.
கடந்த 47 ஆண்டுகளாக மூன்று தனிநபர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தது ஆய்வில் உறுதியானது. இந்த ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வின் போது ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மாநகராட்சி ஆவணங்களை வைத்து அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்பதை மேயர் உறுதிப்படுத்தினார்.
பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தச் சாலை எட்டயபுரம் சாலையில் தொடங்கி மீனாட்சிபுரம் வழியாக ஜெயராஜ் சாலை வரை அமையவுள்ளது.
3-வது கேட் மேம்பாலத்தின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பழைய கட்டிடங்களும் அகற்றப்பட்டு, அங்கேயும் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இச்சாலைகள் பயன்பாட்டிற்கு வரும்போது, பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலின்றி மீனாட்சிபுரம் வழியாகப் பழைய பேருந்து நிலையத்தை மிக எளிதாக அடைய முடியும்.
இந்த அதிரடி ஆய்வின் போது திமுக வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், கதிரேசன், மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகி பேச்சிமுத்து, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.



