தூத்துக்குடி அருகே தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம், விவசாய நிலங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் ஓடைகளை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளதாகக் கூறி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா புதுப்பட்டி மற்றும் அணியாபரநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பண்டாரம், முருகன் உள்ளிட்டோர், தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நிலங்களைச் சுற்றி முள்வேலி அமைத்துள்ளதாக அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். ஆனால், இந்தப் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனையடுத்து, அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரியும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க விவசாய அணி மற்றும் கருங்குளம் ஒன்றிய பா.ஜ.க-வினர் விவசாயிகளுடன் இணைந்து புதுப்பட்டி தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் துணை வட்டாட்சியர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிறிஸ்டோபர் தாசன் மற்றும் காவல் ஆய்வாளர் செந்தில்வேல்குமார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், பா.ஜ.க மாவட்ட தலைவர் சரவணா கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான செந்தில்குமார் பிரபு, கருங்குளம் ஒன்றியத் தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நீர்வழிப்பாதைகள் மற்றும் வடிகால் ஓடைகள் மீட்கப்படும் என்றும், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்ல ஏதுவாகப் பாதை அமைத்துத் தரப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுப் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தில், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், முன்னாள் மண்டல் தலைவர் நங்கமுத்து, மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். போராட்டம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



