புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த 3 வயது சிறுவன், பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகேயுள்ள கட்டாரங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ். இவரது 3 வயது மகன் ராபின். இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்காக வந்துள்ளனர்.
திருவிழா வழிபாடுகளை முடித்துவிட்டு, மீண்டும் தங்களது ஊருக்குச் செல்வதற்காக குடும்பத்தினர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக பின்னோக்கி எடுக்கப்பட்டது. அந்தச் சமயம் பேருந்தின் பின்புறம் நின்றிருந்த சிறுவன் ராபின் மீது பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
தகவல் அறிந்து விரைந்து வந்த புளியம்பட்டி காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அரசுப் பேருந்து ஓட்டுநர் முத்துவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




