• vilasalnews@gmail.com

கனிமொழிக்கு செக் வைக்கிறாரா சபரீசன்? தூத்துக்குடியில் அனல் பறக்கும் அரசியல்!

  • Share on

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க.,வின் தென் மாவட்ட அரசியலில் ஒரு புதிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. அதாவது, தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி., ஒருபுறம் தீவிரமாகப் பணியாற்ற, மறுபுறம் முதல்வரின் மருமகன் சபரீசனின் 'திடீர்' எண்ட்ரி அக்கட்சியினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கனிமொழி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சூறாவளிப் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, நெல்லை, ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்டச் செயலாளர் கிரஹாம்பெல் இடையேயான நீண்டகால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது கனிமொழியின் முக்கிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஓட்டுச்சாவடி முகவர்களுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தி, தேர்தல் பணிகளையும் கனிமொழி முடுக்கிவிட்டுள்ளார்.


மேலும், கனிமொழி ஏற்கனவே நிர்வாகிகளைச் சந்தித்து அறிக்கை பெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக முதல்வரின் மருமகனான சபரீசன் தூத்துக்குடியில் தங்கியிருப்பது கட்சி வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.


கனிமொழி சந்தித்த அதே நிர்வாகிகளை சபரீசனும் தனித்தனியே அழைத்து, தேர்தல் நிலவரம் மற்றும் ஆட்சி மீதான செல்வாக்கு குறித்து ரகசியமாகக் கருத்து கேட்டுள்ளார்.


 "ஏற்கனவே ஒருவரிடம் சொன்ன அதே தகவல்களை, இன்னொருவரிடமும் சொல்வது நேர விரயம் மட்டுமல்ல, இது தலைமையின் மீது எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் குலைக்கிறது," என நிர்வாகிகள் ஆதங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.


"ஒரே கட்சிக்குள் இருவர் வெவ்வேறு திசைகளில் கருத்து கேட்பது ஆரோக்கியமானதல்ல" என்பதே அடிமட்டத் தொண்டர்களின் கருத்தாக உள்ளது. கனிமொழிக்கு போட்டியாக சபரீசன் களமிறக்கப்படுகிறாரா அல்லது இது 'செக் அண்ட் பேலன்ஸ்' முறையா என்ற விவாதம் தூத்துக்குடி தி.மு.க.,வில் அனல் பறக்கிறது.

  • Share on

விபத்தில் சிறுவன் உயிரிழப்பு: அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை!

கல்லத்திகிணறு கிராமத்தில் புதிய சமையலறை மற்றும் உணவுக்கூடம் திறப்பு: எம்.எல்.ஏ சண்முகையா பங்கேற்பு

  • Share on