தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை, பணம் தர மறுத்ததால் மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (65). குடும்பத்தை விட்டுப் பிரிந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக தூத்துக்குடி ராஜாஜி பூங்கா பகுதியில் தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு நுழைவு வாயில் அருகே உறங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், மைக்கேல் ராஜை எழுப்பி வலுக்கட்டாயமாகப் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என்று அவர் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடியது.
காயமடைந்த முதியவர் உடனடியாக அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களைப் பிடித்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திலேயே இத்தகைய வன்முறைச் சம்பவம் அரங்கேறியிருப்பது, நோயாளிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.




