தூத்துக்குடியில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பான தகராறில் கட்டிடத் தொழிலாளியை கத்தியால் குத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் (23) என்பவர் கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று மாலை டூவிபுரம் முதல் தெருவில் உள்ள ஒரு கட்டுமானப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த இடத்திற்கு ஆட்டோவில் வந்த சந்தனராஜ் (25) மற்றும் முத்துராமன் (27) ஆகியோர், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திலேயே தங்களது ஆட்டோவை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆட்டோவை அங்கிருந்து எடுக்குமாறு அங்கிருந்த தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சந்தனராஜ் மற்றும் முத்துராமன் ஆகிய இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாமஸை சரமாரியாகக் குத்தினர்.
காயமடைந்த தாமஸ் உடனடியாக மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து சந்தனராஜ் மற்றும் முத்துராமன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



