தூத்துக்குடி அருகே உரிய அனுமதியின்றி பீடி இலைகளைக் கடத்தி வந்த வாலிபரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸ் குழுவினர், நேற்று அதிகாலை சிறுப்பாடு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனர்.
சோதனையின் போது, அந்த வாகனத்தில் 52 பண்டல்களில் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 16 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சஞ்சய் குமார் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட பீடி இலைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள புதுக்கோட்டை போலீசார், இந்த கடத்தல் கும்பலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு கடத்தலைத் தடுத்த ஆய்வாளர் மற்றும் போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அவர்கள் பாராட்டியுள்ளார்.




