டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றதால் மதுப்பிரியர்கள் அந்த 3 மணி நேரம் மதுவாங்க முடியாமல் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் நீண்டகாலமாக பல்வேறு பிரச்சினைகளால் துன்பப்பட்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது 2026 பிப்ரவரி மாதத்தில் சென்னையில் தொடர்ச்சியாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் ஏற்கனவே பல நாட்களாக நீடித்து வருவதால், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மிக முக்கிய கோரிக்கை, பணி நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பது தான். இதைத் தவிர, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் பென்ஷன் போன்ற சமூக பாதுகாப்பு நலன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் காரணமாக ஊழியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
இதற்காக கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தால் கடைகளில் ஏற்கனவே இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களால் பணியை சமாளிக்க முடியவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் இன்று (9.2.2026 ) கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்தனர்.

அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 125 கடைகளில் 120 கடைகளை டாஸ்மாக் பணியாளர்கள் இழுத்து மூடி போராடியதால், டாஸ்மாக் முன்பு மதுப்பிரியர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், வேறு எங்காவது கடைதிறந்திருமாக என அங்கும் இங்குமாக சில மதுபிரியர்கள் ஓடி தள்ளாடும் நிலையும் ஏற்பட்டது.




