தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை முத்தையாபுரம் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
கடந்த 1997-ம் ஆண்டு, தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த சேகர் (54) என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, சேகர் ஆஜராகாமல் தலைமறைவானார்.
இதனையடுத்து, கடந்த 2001-ம் ஆண்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (எண்-II), சேகருக்கு எதிராக பிடியாணை (Non-Bailable Warrant) பிறப்பித்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பொறுப்பேற்றது முதல், மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பிடிவாரண்ட் குற்றவாளிகளை பிடிக்க தனி கவனம் செலுத்தி வருகிறார். அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கும் இது குறித்து அவர் உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
இதனையடுத்து, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், சார்பு ஆய்வாளர் முகிலரசன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் ரகசிய விசாரணை மேற்கொண்டு, 25 ஆண்டுகளாக போலீசாரின் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்த சேகரை இன்று (09.02.2026) சுற்றி வளைத்துப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சாமர்த்தியமாக கைது செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டு தெரிவித்தார்.



