பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற உள்ள வீரசக்கதேவி ஆலய வருஷாபிஷேக விழாவிற்கு வருகை தருமாறு, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவை பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழுவினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தின் 15- வது ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை மறுநாள் (பிப்.,7 - சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அன்று காலை 8.30 மணிக்கு வருஷாபிஷேக பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, விநாயகர் அனுக்ஞை, எஜமானர் அனுக்ஞை, புண்யா ஹவாசனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, மகா அபிஷேகம், விமான அபிஷேகம், வருஷாபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகின்றன. மேலும், விழாவை முன்னிட்டு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை வீரசக்கதேவி ஆலயக் குழு செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜப் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற உள்ள வீரசக்கதேவி ஆலய வருஷாபிஷேக விழாவிற்கு வருகை தருமாறு, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவை பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழுவினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.




