தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஆறுமுகநேரி பேயன்விளை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு பின்புறம் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது பள்ளி மைதானம் அருகே சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் விற்பனைக்காக 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சேர்ந்த அப்துல் சுக்குர் (25) என்பது தெரிந்தது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 14 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சாகுபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்றதாக காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகமது புகாரி (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்தும் 150 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.




