தூத்துக்குடியில் நடைபெற்ற பரதகுல உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அதன் தலைவர் சேசையா வில்லவராயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஹெர்மன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் மீனவ சமுதாயத்திற்கான அரசியல் அங்கீகாரம் குறித்து அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதில் தூத்துக்குடி மாநகரை கிழக்கு மற்றும் மேற்கு என இரண்டாகப் பிரித்து, மீனவர்கள் அதிகம் வசிக்கும் 'தூத்துக்குடி கிழக்கு' தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்.
தூத்துக்குடி மட்டுமல்லாது, மீனவர் வாக்குகள் பலமாக உள்ள திருச்செந்தூர், ராதாபுரம் மற்றும் குளச்சல் ஆகிய தொகுதிகளில் மீனவ வேட்பாளர்களுக்கே அரசியல் கட்சிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் மீனவர்களுக்கெனப் பிரத்யேகமாகத் தனித் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். எந்தக் கட்சி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு வழங்குகிறதோ, அந்தக் கட்சிக்கே தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரவளிப்பார்கள்.
1996-ம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் ஜெனிபர் சந்திரனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் போல, தற்போது மீனவர்களுக்குத் தொடர்ச்சியான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை என்று இக்குழுவினர் வேதனை தெரிவித்தனர்.
திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற பிரதான கட்சிகள் இந்தத் கோரிக்கையை எப்படிக் கையாளப் போகின்றன என்பதைப் பொறுத்தே தென் மாவட்டங்களின் கடற்கரை ஓரத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




