தூத்துக்குடியில், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீசார் கைது செய்தனர்.
2021 தேர்தல் வாக்குறுதியின்படி சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் கனகவேல் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெக வீரபாண்டிய கட்டபொம்மன், ஓய்வூதிய பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எபனேசர் டேனியல், தன்ராஜ், ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மற்றும் 60-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். திடீர் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




