தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் புதிய இஎஸ்ஐ மருத்துவமனை வரும் மார்ச் மாத இறுதிக்குள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் நேற்று(02.02.2026) நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, இஎஸ்ஐ மருத்துவமனைக் கட்டுமானம் குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அவர் பேசுகையில், "தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆனால், மருத்துவக் கண்காணிப்பாளர், வெளிநோயாளிகள் பிரிவு ஊழியர்கள் மற்றும் இதர மருத்துவ வல்லுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே மருத்துவமனை இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்தப் பணியாளர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள்? மருத்துவமனை எப்போது செயல்பாட்டுக்கு வரும்?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "தூத்துக்குடி மருத்துவமனையின் பணிகள் 98 சதவீதம் முடிந்துவிட்டன என்பதை உறுதிப்படுத்துகிறேன். தற்போது மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் இந்த நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, மார்ச் மாத இறுதிக்குள் மருத்துவமனை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்," என்று அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் நிலையில், இந்த இஎஸ்ஐ மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருவது அவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். பணியாளர்கள் நியமனம் குறித்த அமைச்சரின் இந்த உறுதிமொழி, இப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



