2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது வேட்பாளர் தேர்வு பணிகளில் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டு வருகிறது.
ஆளும் கட்சியான திமுகவை எதிர்கொள்ளவும், மீண்டும் அதிமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சியமைக்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தீவிரம் காட்டிவருகிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் செய்ததைப் போலவே, சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான அளவில் இளைஞர்களுக்கும், புதிய முகங்களுக்கும் வாய்ப்பளிக்கத் அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேர்வுக் குழு, விருப்ப மனு அளித்தவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களைக் கேட்டறிவதோடு, வேட்பாளர்களின் செல்வாக்கு குறித்துத் தொகுதி வாரியாகத் தனியாரைக் கொண்டு ரகசிய ஆய்வுகள் நடத்தப்படுகின்றனவாம்.
அதோடு மாவட்ட செயலாளர்கள் தரப்பில் வேட்பாளர்களை பரிந்துரைக்கலாம். ஆனால், அவர்கள் பரிந்துரைக்கும் பெயர்கள் தான் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் என்று இருக்காதாம். மேலும், மாவட்ட செயலாளர்களே வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாமல் போகலாம் என்ற அதிமுக தலைமையின் உள்விவகாரங்களில் இருந்து வரும் தகவல் தான் அதிமுகவில் சமீபத்திய அதிர்ச்சி ரகம்.
அதிமுகவின் பலமே அதன் அடிமட்டத் தொண்டர்கள் தான். மேலும், அடிமட்டத் தொண்டனையும் வேட்பாளராக்கி எம்எல்ஏ, எம்பி, அமைச்சராக்கி அழகு பார்க்கும் ஒரே கட்சி அது அதிமுக தான். இந்த நடைமுறையை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் பின்பற்ற இருக்கிறாராம்.
அதனால் தான் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற நிலை இருப்பதால், யார் எந்த தொகுதிக்கு வேட்பாளராகக்கூடும் என்ற ஆவல் அதிமுகவில் எப்போதும் இருப்பது உண்டு.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில், வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக உள்ளன. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், தெற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் உள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக அதிமுகவின் கோட்டையாக விளங்கி வந்த ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளை திமுகவிற்கு விட்டு கொடுத்ததாலும், தெற்கு மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக இழந்ததாலும், கடம்பூர் ராஜூ மற்றும் சண்முகநாதன் ஆகிய இரண்டு மாவட்ட செயலாளர்கள் மீதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பெரிய மதிப்பு கிடையாதாம்.
எனவே, தூத்துக்குடி மாவட்ட தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் நேர்காணலின் போது, கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் தோல்வி குறித்து சுட்டிக்காட்டி மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி கடிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனக்கு உட்பட்ட 3 தொகுதிகளையும் கோட்டை விட்டது, சி.த.செல்ல பாண்டியனின் அணி, சண்முகநாதன் அணி என இரண்டு தரப்பாக கோஷ்டி அரசியல் ஈடுபடுவது என சண்முகநாதன் மீது அதிமுக தலைமை கடும் அப்செட்டில் இருக்கிறதாம்.

எனவே, வரக் கூடிய சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் சண்முகநாதனுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படவோ அல்லது அவரது சொந்த தொகுதியான ஸ்ரீவைகுண்டம் அல்லாது வேறு தொகுதியில் போட்டியிட அவரை தலைமை வலியுறுத்தக்கூடும் என சொல்லப்படுகிறது.
ஆனால், மாவட்டச் செயலாளருக்கு எப்படி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும்? இது எல்லாம் கட்டுக்கதை என சண்முகநாதன் தரப்பு ஆதரவாளர்கள் ஓங்கி பேச, "அதிமுக என்ற கட்சி அடிமட்டத்தொண்டனை நம்பி மட்டுமே இருக்குமே தவிர தனிஅதிகார மையமாக யாரையும் நம்பி இருக்காது என்பதற்கு சாட்சியே, எம்ஜிஆரின் போர்ப்படையில் தளபதியாய், 1972-ல் தொடங்கிய அவரின் அரசியல் பயணம், தடம் மாறாமல் தொடர்ந்து அதிமுக வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாய் மாறி நின்ற செங்கோட்டையனையே தூக்கி விசப்பட சம்பவம். இதில் மாவட்ட செயலாளர் மட்டும் என்ன விதிவிலக்கா என்ற எதிர் பதில் விழ தாமதமில்லை.
ஆகவே, அதிமுகவில் யார் எப்போது வேண்டுமானாலும் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று எம்எல்ஏ, அமைச்சர் ஆகலாம் என்ற ஒன்றை நம்பிக்கையோடு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் காத்திருக்க, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு சுதாகர், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ மணி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு கோசல்ராம் ராஜா, விளாத்திகுளத்திற்கு எட்டயபுரம் நகரச் செயலாளர் ராஜா குமார், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் சரவணபெருமாள், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உமரி ராஜேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு புதுமுகங்கள் வேட்பாளர் கனவில் காத்திருக்கின்றனர்.

இதில், தூத்துக்குடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு வாய்ப்பு வந்து விடக்கூடாது என அங்கு தனது தீவிர ஆதரவாளரான சுகாதரை வேட்பாளராக்க மாவட்ட செயலாளர் சண்முகநாதன் காய் நகர்த்துவதும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சண்முகநாதனுக்கு நெருக்கடியை தர, சி.த.செல்லப்பாண்டியன் தீவிர ஆதரவாளரான உமரிக்காடு முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், தூத்துக்குடி மாவட்ட அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவரும், அதிமுக ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளருமான உமரி ராஜேஷ்குமாரை ஸ்ரீ வைகுண்டம் தொகுதிக்கு வேட்பாளராக்க முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் காய் நகர்த்துவதும் தான் உள்ளூர் வேட்பாளர் போட்டி அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மொத்தத்தில் இது தேர்தல் காலம் என்பதால் பரபரப்பு அரசியலுக்கு பஞ்சம் இருக்காது அவ்வளவுதான்.



