தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். கோயில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வரும் இவருக்கு, திருமண புரோக்கர் மூக்காண்டி மூலம் ஒரு வரன் அறிமுகமானது.
தஞ்சாவூரைச் சேர்ந்த அந்தப் பெண் ஆதரவற்றவர் என்றும், அவருக்கு யாரும் இல்லை என்றும் புரோக்கர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய பாஸ்கர், மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யச் சம்மதித்தார். இதற்காக புரோக்கர்களுக்கு கமிஷன் தொகையாக ரூ.40,000 வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 20-ம் தேதி திருச்செந்தூர் துர்க்கை அம்மன் கோயிலில் வைத்து, 4 கிராம் தங்கத் தாலியுடன் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணுக்குத் தேவையான புத்தாடைகளையும் பாஸ்கர் வாங்கித் தந்துள்ளார்.
திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் மட்டுமே பாஸ்கருடன் குடும்பம் நடத்திய அந்தப் பெண், கடந்த 22-ம் தேதி தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். பாஸ்கர் வெளியில் சென்றிருந்த சமயம் பார்த்து, வீட்டில் இருந்த ரூ.10,000 ரொக்கம் மற்றும் புதிய நகைகளுடன் அந்தப் பெண் மாயமாகியுள்ளார்.
சந்தேகம் வராமல் இருக்க, பாஸ்கரின் செல்போனில் இருந்த தங்களது திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் அந்தப் பெண் அழித்துவிட்டுச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர், புரோக்கர் மூக்காண்டியைத் தொடர்பு கொண்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை.
தற்போது ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாஸ்கர், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணமான இரண்டே நாட்களில் இளம்பெண் தலைமறைவான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



