சென்னை அருகே உள்ள மதுராந்தகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.23) நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். இந்தக் கூட்டத்திற்கு முன்பாக, தங்களது கூட்டணியைப் பலப்படுத்தவும், இழுபறியில் உள்ள தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான பாஜக குழுவினர் சென்னையில் முகாமிட்டு தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, பிரதமரின் வருகைக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய திருப்பமாக டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்று ( ஜன.21 ) புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இது கூட்டணிக்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியிடம் இருந்து 56 தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. இதில் பாஜக மட்டும் சுமார் 30 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.
மேலும், தேஜ கூட்டணியின் பலத்திற்கு புதிய பாய்ச்சலாக இன்று இணைந்த டிடிவி தினகரனின் அமமுகவிற்கு 7 தொகுதிகள் வழங்க அதிமுக முன்வரும் நிலையில், 12 தொகுதிகளை தினகரன் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
அதாவது, 2017-ல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தங்கதமிழ்செல்வன் (ஆண்டிபட்டி) , பி. பழனியப்பன் (பாப்பாரப்பட்டி, வி.செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி) , எஸ். முத்தையா (பரமக்குடி) பி. வெட்ரிவேல் (பெரம்பலூர்), எம். கோதண்டபாணி (திருப்போரூர்), எம். ரங்கசாமி (தஞ்சாவூர்), ஆர். தங்கதுரை (நிலக்கோட்டை), ஆர். பாலசுப்ரமணி (ஆம்பூர்), இ.எஸ்.ஜி. சுப்ரமணியன் (சத்தூர்), ஆர். கந்தராசு (ஒட்டப்பிடாரம்), கே. உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்), மரியாப்பன் கென்னடி (மானாமதுரை), கதிர்காமு (பெரியகுளம்), சி. ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), என்.ஜி. பார்த்திபன் (சோளிங்கர்), எம். ரங்கசாமி (தஞ்சாவூர்), ஆர். முருகன் (அரூர்) ஆகிய 18 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து தங்களது பதவிகளை இழந்தனர்.
இந்த 18 பேரில் இன்றும் தன்னை நம்பி அமமுகவில் தன்னுடன் பயணித்து வருபவர்களுக்கு வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சீட்டுகளை பெற்று மீண்டும் அவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக்கி அழகு பார்க்க விரும்புகிறாராம் டிடிவி தினகரன்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில், விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய இரு தொகுதிகளை கூட்டணியில் அமமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்பதில் டிடிவி தினகரன் உறுதியாக இருக்கிறாராம். ஆனால் தொகுதி பங்கீட்டில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அதிகாரபூர்வ பட்டியல் வெளியானால் மட்டுமே, அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என்ன என்பது உறுதியாக தெரிய வரும்.




