தமிழக அரசியலில் வரலாற்று ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக ஓட்டப்பிடாரம் கருதப்படுகிறது.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோர் பிறந்த மண்ணை உள்ளடக்கிய பெருமை இந்தத் தொகுதிக்கு உண்டு. விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் பிரதான தொழிலாகக் கொண்ட மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதி தனித் தொகுதி என்பதால், இங்கு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், ஓட்டப்பிடாரம் தொகுதியைப் பொறுத்தவரை, திராவிடக் கட்சிகளுக்கு இடையேதான் எப்போதும் நேரடிப் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, சமீபகாலமாக இத்தொகுதி திமுகவின் பலமான கோட்டையாக உருவெடுத்துள்ளது.
தற்போது ஓட்டப்பிடாரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த எம்.சி. சண்முகையா இருந்து வருகிறார். இவர் 2019 இடைத்தேர்தலிலும், பின்னர் 2021 பொதுத்தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இத்தொகுதியில் ஆளும் திமுக தனது செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளவும், அதிமுக இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றவும் தீவிரமாக இப்பொழுதே தேர்தல் களப்பணிகளைத் தொடங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. எதற்காக திடீரென அதிமுக சார்பில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அக்கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர் என்று விசாரிக்கையில், அவர்கள் இவ்வாறான வாக்கு கணக்குகளை காட்டுகின்றனர்.
அதாவது, கடந்த 2021 தேர்தலின் போது, சிட்டிங் திமுக எம்எல்ஏ சண்முகையா 73,110 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மோகன் 64,600 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வைகுண்டமாரி 22,413 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி 6,544 வாக்குகளும், அமமுக கூட்டணியில் தேமுதிக ஆறுமுகநயினார் 5,327 வாக்குகளும் பெற்றனர்.
இதில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இடையே 8,510 வாக்குகள் வித்தியாசம். இந்த குறைந்த எண்ணிக்கையிலான வாக்கு வித்தியாசங்களை மாற்றி அமைத்து அதிமுக வெல்லது பெரிய கடினமான காரியம் இல்லை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது அமமுக இடம் பெற்றுள்ளதால் அதிமுகவிற்கான வாக்குகள் மேலும் அதிகரிக்ககூடும் என்பதால், ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுகவிற்கான சாதகமான சூழலோடு உள்ளது என்ற நம்பிக்கை அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது. ஆகவே, அதிமுக சார்பில் இத்தொகுதியில் 2026 தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில், அதிமுக சார்பில் போட்டியிட அக்கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக மருத்துவர் அணிச் செயலாளரும், கருங்குளம் யூனியன் முன்னாள் தலைவருமான டாக்டர் எஸ்.எம்.ஏ கோசல்ராம் ராஜா, வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைச் செயலாளரும் கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினருமான எம்.ஆர்.வி கவியரசன் ஆகிய நால்வருக்கும் இடையே தான் அதிமுக வில் சீட் வாங்க உச்சகட்ட போட்டி நிலவி வருகிறது.
இதில், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுகவின் முகமாக அறியப்படுகிற முன்னாள் எம்எல்ஏ மோகனே அதிமுக வேட்பாளர் ரேஸில் முந்திச் செல்கிறார். மேலும், இத்தொகுதியை கூட்டணியில் அமமுகவும் கேட்கிறதாம். எப்படியாவது இத்தொகுதியை திமுகவிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற முனைப்போடு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விரும்புகிறதாம்.

ஆனால், சிட்டிங் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் களப்பணியும் மக்கள் பணியும் தொகுதி மக்கள் மத்தியில் அவர் மீதான நன்மதிப்பானது அதிகரித்து நங்கூரம் இட்டு இருப்பதால், தொகுதியை திமுகவிடம் இருந்து மீட்டெடுப்பது அதிமுகவிற்கு அவ்வளவு எளிதல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஆக மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு தனித்தொகுதியும் ஓட்டப்பிடாரம் தான். தனிக்கவனம் பெறும் ஒரே தொகுதியும் ஓட்டப்பிடாரம் தான் போல.



