• vilasalnews@gmail.com

மார்கண்டேயன் எம்எல்ஏவால் தலைகீழாக மாறிய விளாத்திகுளம் தொகுதி!

  • Share on

ஒரு குறிப்பிட்ட கட்சியின் கோட்டையாக விளங்கிய தொகுதியை என்னால் மாற்றி காட்ட முடியும் என நிருபித்து காட்டிய விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மார்கண்டேயன், விளதை தொகுதி கரிசல் பூமியின் சூறாவளி காற்று என்றும், 2026 தேர்தல் களம் எங்களுக்கான சாத்திய களமே என படு உற்சாகத்தில் இருக்கின்றனராம் தொகுதி உடன்பிறப்புகள்.


தூத்துக்குடி மாவட்டத்தில் பேச்சிலும், செயலிலும் தேர்ந்த ஆகச்சிறந்த அரசியல்வாதிகளில் முதன்மையாவர்களில் ஒருவராக திகழ்பவர் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மார்கண்டேயன். அவரின் இருப்பிடம் அக்கட்சிக்கு எப்போதும் பலமே என்று சொல்லும் அளவிற்கு அவரின் செயல்பாடு இருக்கும்.


மார்கண்டேயன் முதன் முதலில் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி சுமார் 72,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் 2016 தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கை குறையவிடாமல் கட்சியை வலுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வந்தார். பின்னர், 2019-ல் நடைபெற்ற விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அவர் விரும்பிய நிலையில், அவருக்கும் அதிமுக மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூவிற்குமான அரசியல் மோதலில், தனது அரசியல் நடவடிக்கையால் மார்கண்டேயனை அதிமுகவில் ஓரம் கட்டும் வேலையில் இறங்கியதோடு, 2019 ல் நடந்த விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலிலும் மார்கண்டேயன் போட்டியிடாத படி கடம்பூர் ராஜூ காய்களை நகர்த்தி முடித்தார்.


புராணக் கதாபாத்திரத்தில் சிவபெருமானின் அருளால் மரணத்தை வென்றவர் மார்கண்டேயன் என்ற பெயரை பெற்றதால் என்னவோ, அரசியலில் தனக்கு இறப்பே இல்லை என்பது போல, மார்கண்டேயன் அதிமுகவிலிருந்து விலகி, 2019 விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக, எதிர்கட்சி திமுக என இருப்பெரும் கட்சிகளின் நேரடி மோதல்களுக்கு நடுவே சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார்.


அந்த தேர்தலிலும் அதிமுக,  திமுக வேட்பாளர்களை தாண்டி சுயேச்சை வேட்பாளர் மார்கண்டேயனே பெரும் பேசுபொருளாக ஆனார். அந்தத் தேர்தலில் மார்கண்டேயன் தோல்வியுற்ற போதிலும், சுமார் 27,000 வாக்குகளைப் பெற்று தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்தார்.


இதனையடுத்து, 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இணைந்தார். இவரின் வருகை மாவட்டத்தில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை உயர்த்தும் என்று கணக்கு போட்ட திமுக மாவட்ட செயலாளர் கீதாஜீவனும் மார்கண்டேயனை கட்சியில் அரவணைத்துக் கொண்டார். தந்தையிடம் தேர்ந்த அரசியல் பாடம் படித்த கீதாஜீவன் அரசியல் கணக்கு எப்போதுமே மிஸ் ஆகாது. குறி வச்சா இரை விழுந்தே ஆகனும் என்பது போல், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் மார்கண்டேயன் போட்டியிட்டார்.


தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் சின்னப்பனை விட 38,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதனால், அதிமுகவின் எஃகு கோட்டை விளாத்திகுளம் என்ற பெயரை சுக்கு சுக்காக நொறுக்கி, நான் இருக்கும் இடம் தான் வெற்றியின் இடம், இல்லாவிட்டால் அது வெற்றிடம் தான் என அரசியலில் மாஸ் காட்டி, விளாத்திகுளம் தொகுதியின் அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்டார், கரிசல் பூமியின் சூறாவளி காற்று என்று கட்சியினரால் புகழப்படும் மார்கண்டேயன்.


மார்கண்டேயன் போன்ற அரசியல் ஆளுமைகளை சரியாக கையாளத் தெரியாத கடம்பூர் ராஜூவின் தவறான அரசியல் நடவடிக்கையே விளாத்திகுளம் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என்ற தனித்தன்மையை இழக்க காரணம் என அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் மனம் வெதும்ப ஆரம்பித்தனர். அதனால் ஒன்றியச்செயலாளர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய தொடங்கினர் புதூர் ஞானகுருசாமி, விளாத்திகுளம் நடராஜன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள். அப்போது தொடங்கிய அதிமுகவின் சரிவு இப்போது வரை மீண்டபாடியில்லை.


இதனால், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையிலும் கூட, தொகுதியில் அதிமுகவினர் உற்சாகம் இன்றி தோய்ந்த முகத்துடனே இருக்கின்றனர்.  அதிமுக சார்பில் போட்டியிட கட்சியினரிடைய கடும் போட்டி நிலவும். போட்டியிட மட்டுமே வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படி வாய்ப்பு கிடைத்தால் 100% சட்டமன்ற உறுப்பினர்  தான் என்ற நிலையில் இருந்த  விளாத்திகுளம் தொகுதியில், வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட யாரெல்லாம் மல்லு கட்டுகிறார்கள் என்று கணிப்பை சொல்லக்கூட பெயர் கிடைக்காத நிலையே அதிமுகவில் தற்போது இருப்பதாக உட்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


மீண்டும் களம் கண்டு மீண்டும் அதிமுகவின் எஃகு கோட்டையாக விளாத்திகுளம் தொகுதியை ஆக்க வேண்டும் என்ற முனைப்போடு முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் ஒருவர் மட்டுமே முனைப்பு காட்டி வருவதாகவும், ஒரு வேளை அதிமுக ஆளும் கட்சி ஆகிவிட்டால் ஒன்றிய பெருந்தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பதவிகளை பிடித்து விட வேண்டும் என்ற எதிர்கால தொலைநோக்கு சிந்தனையோடு, மாவட்ட செயலாளரின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு ஆளாளுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவாறு மனு போட்டுவிட்டு கப்சிப் என இருக்கின்றனராம் கட்சி நிர்வாகிகள். மற்றபடி சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் களத்தை அவர்கள் ரசிக்கவில்லையாம்.


ஒருகாலத்தில் திமுகவில் போட்டிப்போட ஆள் தேடிய காலம் போய், அதிமுகவில் ஆள் தேடக்கூடிய காலம் வந்துவிட்டதோ என்று பேசும் அளவிற்கு விளாத்திகுளம் தொகுதியில் அரசியல் வரலாற்றை புரட்டிப்போட்ட தொகுதியின் திமுக எம்எல்ஏ மார்கண்டேயனே தற்போதைய சூழலில் 2026 தேர்தல் களத்தில் முந்திச்செல்லும் குதிரையாக இருக்கிறார் என்பதை கள நிலவரம் காட்டுகிறது.

  • Share on

தூத்துக்குடியில் இதுவே முதல் முறை... பயணிகளுக்கு அடித்தது யோகம் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனின் அதிரடி 'ஏசி' கிப்ட்!

ஆணையர் ப்ரியங்கா தலைமையில் பெண்கள் அணியா? மேயர் ஜெகன் தலைமையில் ஆண்கள் அணியா? களை கட்டிய தூத்துக்குடி மாநகராட்சி வளாகம்!

  • Share on