தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி முழுக்க முழுக்க மானாவாரி விவசாயத்தை கொண்டது . இங்கு மிளகாய் வத்தல் சாகுபடி பெருமளவில் நடைபெறுகிறது. கம்பு, மக்காச்சோளம், பருத்தி போன்றவற்றையும் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
மேலும், வேம்பார் முதல் தருவைகுளம் வரை கடற்கரை, மீன்பிடி தொழில், உப்பள தொழில் நடக்கிறது. மேலும் கரிமூட்டம் தொழில் என பன்முகத் தொழில்கள் இங்கு உள்ளது.
விளாத்திகுளம், எட்டயபுரம் என 2 தாலுகாக்கள், ஓட்டப்பிடாரம் தாலுகாவின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. விளாத்திகுளம், புதூர் ஆகிய யூனியன்களும், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் ஆகிய யூனியன்களில் சில பகுதிகளும் அடங்கி உள்ளன. மேலும் விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் ஆகிய நகர பஞ்சாயத்துகள் உள்ளன.
மகாகவி பாரதியார், சீறாப் புராணம் இயற்றிய உமறுப் புலவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர், இசை மேதை நல்லப்பசாமி போன்றவர்கள் வாழ்ந்த பூமி விளாத்திகுளம் தொகுதி.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 19.12.2025 அன்று சிறப்பு தீவிர திருத்தம் 2026 வரைவு வாக்காளர் பட்டியலை வெளியீட்டின் படி, விளாத்திகுளத்தில் ஆண் வாக்காளர்கள் 97 ஆயிரத்து 273 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 660 பேரும், 3 ஆம் பாலித்தனவர்கள் 14 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 97 ஆயிரத்து 947 பேர் உள்ளனர்.
இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. ஆகவே, விளாத்திகுளம் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என்று சொல்லப்படுவதுண்டு. இந்த நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதி திமுக வசம் சென்றுவிட்டது. ஆகவே, இழந்த கோட்டையை 2026 ல் மீட்க வேண்டும் என்ற முனைப்போடு தொகுதி அதிமுகவினர் படுதீவிரமாக களப்பணி ஆற்றிவருகின்றனர். அதோடு அதிமுகவின் கோட்டையாக இருந்த தொகுதிகள் கடந்த தேர்தலில் எவையெல்லாம் கைவிட்டு போனதோ, அந்தத் தொகுதிகளின் மீது தனிப்பார்வையை செலுத்தி, அத்தொகுதிகளை இத்தேர்தலில் மீட்பது தான் தனது தலையாய கடமையாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருதி வருகிறாராம்.
கட்சியில் அடிமட்ட தொண்டனும் எம்எல்ஏ, எம்பி, அமைச்சராக ஆகலாம் என்ற நிலையை உருவாக்கும் ஒரே கட்சி அது அதிமுக மட்டுமே என்ற பெயரை எம்ஜிஆர், ஜெயலலிதா வைத்திருந்தனர். அதையே தானும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறாராம்.
அதை வெளிக்காட்டும் விதமாக வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள், இளம்பெண்கள், புதுமுகங்களை களம் இறக்கி அவர்களை எம்எல்ஏ, அமைச்சராக்கி அழகு பார்க்க எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக இருக்கிறாராம்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதியில் புதுமுகம் ஒருவர் வேட்பாளராக களம் இறக்கவே வாய்ப்பு இருப்பதாக அதிமுக தலைமை வட்டாரத்தில் இருந்து வெளிவரக்கூடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த புதுமுக வேட்பாளர் வரிசையில் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா முதன்மை வரிசையில் நிற்கிறாராம். அதே வேளையில், தொகுதிக்கு நன்கு பரிட்சயமானவரும், இழந்தரை வைத்தே மீண்டும் தொகுதியை மீட்க வேண்டும் என்ற புதுவித அரசியல் தேர்தல் கள உத்தியை கையாளும் ஒரு எண்ணமும் எடப்பாடியாரிடம் இருப்பதால் முன்னாள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பனும் வேட்பாளர் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
புதுமுகத்தை வைத்தோ அல்லது இழந்தரை வைத்தோ என இரண்டில் ஏதாவது ஒரு உத்தியை கடைசி நேர கள நிலவரத்தை பொறுத்து விளாத்திகுளம் தொகுதியை மீண்டும் அதிமுக வசம் ஆக்க வேண்டும் என்பதில் அதிமுக தலைமை உறுதியாக இருக்கிறதாம்.
அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளால் வசைபாடி காற்றாலை நிறுவனங்களை மிரட்டுவது முதல் மணல் திருட்டு, கண்மாய் ஆக்கிரமிப்பு என இயற்கை வளங்கள் சுரண்டல் வரை தொகுதி மக்களின் அதிர்ப்தியில் இருக்கும் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்கண்டேயனை வீழ்த்த, பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் இந்த இருவிதமான வேட்பாளர் தேர்வு உத்திகளும் சரியானதே என்று உற்சாகம் கொள்கின்றனர் தொகுதி அதிமுகவினர்.



