• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பெண்களின் தங்க தாலி செயினுக்கு குறிவைத்த 2 பேரை தட்டி தூக்கியது போலீஸ்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் காவல் நிலையம் மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட மொத்தம் 18 ½ பவுன் தங்கம் மீட்கப்பட்டது.


கடந்த 15.10.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவன்நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் 15 சவரன் தங்க தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற வழக்கில் சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


அதேபோன்று கடந்த 27.11.2025 அன்று தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரகமதுல்லாபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் 3½ சவரன் தாலி செயினை மர்மநபர்கள் பறித்து சென்ற வழக்கில் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்த நிலையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர்  பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று (03.12.2025) பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயராஜ்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அங்கு ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மேற்படி போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சிக்கும் போது காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தூத்துக்குடி பண்டாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான விஜயகுமார் மகன் பரத் (22) மற்றும் ஐயப்பன் மகன் அஜித்குமார் (29) ஆகியோர் என்பதும் அவர்கள் மேற்படி சிப்காட் மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்டவர்கள் என்பதும் மேற்படி 2 இடங்களில் பறித்த தங்கத்தை அங்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரும்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது.


இதனைடுத்து உடனடியாக மேற்படி போலீசார் பரத் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மேற்படி வழக்குகளில் சம்பந்தப்பட்ட மொத்தம் 18½பவுன் தங்கத்தை மீட்டு ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கடந்த 20.11.25 அன்று நமது விளாசல் நியூஸ் இணைய செய்தி தளத்தில், "தூத்துக்குடியில் அசால்டாக செயின் பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்கள்... அச்சத்தில் பொதுமக்கள்"! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.


அச்செய்தி பின்வருமாறு:-


தூத்துக்குடியில் வீட்டிற்கு வெளியே தனியாக நிற்கும் பெண்கள், தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை என குறிவைத்து செயின்களை பறித்துவிட்டு அசுர வேகத்தில் பைக்கில் தப்பிச் செல்லும் மர்ம நபர்களின் திருட்டு செயல்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


தூத்துக்குடி மாநகர் அண்ணாநகரில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடமும்,  கட்டபொம்மன் நகரில் வீட்டின் முன்பு நின்று குழந்தைக்கு உணவு கொடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடமும் நேற்று ( 19.11.25 ) இரவு ஹெல்மெட் அணிந்த படி பைக்கில் வந்த மர்ம நபர் செயினை பறிக்க முயற்றுள்ளனர். இவை அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.


ஆட்கள் நடமாடக்கூடிய, தெருக்களில் சர்வ சாதாரணமாக செயினை பறிக்க முயலும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றால் இவ்வளவு துணிகரம் திருடர்களுக்கு எப்படி வருகிறது? தூத்துக்குடியில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. இது போன்ற சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


போலீசாரின் முழு இரவு நேர ரோந்து பணி, குறிப்பிட பகுதியில் மட்டும் என்றில்லாமல் தூத்துக்குடியில் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு நாளும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தினால் மட்டுமே பொதுமக்களுக்கான பாதுகாப்பு சூழல் ஏற்படும். பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனி கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்களுக்கும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு செய்தி வெளியிட்டு இருந்தோம்.

https://www.vilasalnews.com/news/thoothukudi/6315-mysterious-individuals-are-engaged-in-chain-snatching-in-thoothukudi-public-in-fear/

பெண்களின் தாலி செயினை குறிவைக்கும் வழிப்பறி கும்பலின் திருட்டை தடுக்க தூத்துக்குடியில் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு நாளும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தினால் மட்டுமே பொதுமக்களுக்கான பாதுகாப்பு சூழல் ஏற்படும் என்று சுட்டிகாட்டியிருந்தோம். அது போலவே வாகன தணிக்கையிலேயே செயின் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி பண்டாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான விஜயகுமார் மகன் பரத் (22) மற்றும் ஐயப்பன் மகன் அஜித்குமார் (29) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட மொத்தம் 18 ½ பவுன் தங்கம் மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது.

  • Share on

அட்டகாசத்திற்கு முடிவே இல்லையா... கண்ணீர் வடிக்கும் விளாத்திகுளம் விவசாயிகள்!

சண்முகையா எம்எல்ஏ விற்கு புகழாரம் சூட்டும் மகளிர் சுய உதவிக்குழுவினர்!

  • Share on