விளாத்திகுளம் பகுதியில் பன்றிகள் அட்டகாசத்தால் ஆயிரகணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் வேளாண் வட்டாரங்களில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசி, சோளம், கம்பு, வெங்காயம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் மானாவாரி நிலத்தில் பயிர் செய்து வருகின்றனர்.
இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக பன்றிகள், மான்கள் தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டும் பன்றிகள் அட்டகாசம் தொடங்க ஆரம்பித்துவிட்டன.
அதாவது, இன்று (3.12.25) காலை விளாத்திகுளம் தாலுகா, சிவஞானபுரம் அருகே கே.குமரெட்டையாபுரம் ( கரையான்பட்டி ) கிராமத்தில் விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் சென்று பார்த்த போது, வேல் ஈட்டி கொண்டு நெஞ்சில் பாய்ச்சியது போன்ற ரண வேதனை உணர்ந்தராம். அதாவது அந்த பகுதிகளில் பயிரிடப்பட்ட சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான மக்காசோளம் பயிர்கள் பன்றிகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தனவாம்.
இது போன்று மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை பன்றிகள் தின்று அழித்து வருவதால், முறையாக மகசூல் எடுக்க முடியாமல் நஷ்டமடைந்து வருகிறோம். காட்டுப்பன்றிகள் அட்டகாசம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்,
வேளாண்மை துறை, வனத்துறை அதிகாரிகள் தொடங்கி மாவட்ட கலெக்டர் வரை பலமுறை புகார் அளித்தும் தற்போது வரை பன்றிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த கொஞ்சம் கூட நடவடிக்கை எடுக்கவில்லை.
நிலத்தில் இறங்கி வேலை செய்து பன்றிகளால் காயம் படும் விவசாயிகளின் காயத்துக்கு மருந்து செலவிற்கு கூட இந்த நிலத்தில் விளைந்த பயிர்கள் விற்பனை விலைக்கு வராது என்பது வேதனைக்குரிய ஒன்று. இவ்வளவு இன்னல்களிலும் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் என கண்ணீர் வடிக்கின்றனர் விவசாயிகள்.
மேலும், கடந்த 4 ஆண்டுகளாக பன்றிகளின் தொல்லை விளாத்திகுளத்தில் பெருமளவு உள்ளது. ஆனால் தொகுதி சட்டமன்ற உறுப்பினரோ, தன்னை பசுமை ஆர்வலராகவும் விவசாயியாகவும் காட்டி கொள்ள முயல்கிறாரே தவிர, உண்மையாக அவ்வாறு வாழ மறுக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. விவசாயிகளுக்கு ஏற்படும் இது போன்ற இன்னல்களை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? என திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் மீது தொகுதி விவசாயிகள் கடும் அதிர்ப்தியிலும் கோபத்திலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பன்றிகளின் தொல்லைக்கு ஒரு முடிவே இல்லையா என்று புலம்பி தலையில் முக்காடு போட்டு புலம்புவதை தவிர எங்களும் வேறு வழி தெரியலையே என இரத்த கண்ணீர் சிந்துகின்றனர் விளாத்திகுளம் தொகுதி மானாவாரி பயிர் செய்யும் அப்பாவி விவசாயிகள்.




