வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. இரண்டு தினங்களாக சற்று மழை ஓய்ந்த நிலையில், டிட்வா புயலின் எதிரொலியாக தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
மேலும், வங்க கடலில் உருவாகியுள்ள இந்த டிட்வா புயல் காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. எனவே அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடியில் கடந்த 30 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. எனவே தூத்துக்குடியில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு கடும் குளிர் வீசுவதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை காணப்படுகிறது. இந்த டிட்வா புயல் வடக்கு நோக்கி நகர்ந்த பின்னர்தான் தூத்துக்குடியில் மழை குறையும் என தூத்துக்குடி வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.
தூத்துக்குடியில் நிலவும் கடும் குளிர் தான் தற்போது டிரெண்டிங் ஆகி உள்ளது. ஹலோ ஊட்டி, கொடைக்கானல் எல்லோரும் பின்னாடி போங்க தூத்துக்குடியை முன்னாடி விடுங்க என, இன்னைக்கு தேதிக்கு குளிர்ல நம்பர் 1 ஊருனா அது நம்ம தூத்துக்குடி தான் என தூத்துக்குடியின் தற்போதைய நிலவரத்தை மீம்ஸ் மூலம் நெட்சன்கள் தெறிக்க விடுகின்றனர்.



