தூத்துக்குடியில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், பழனியாண்டி மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. சில இடங்களில் மழைநீர் வடிந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில் தான் உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி நால்வர் நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற மில் தொழிலாளியான பழனியாண்டி என்ற முதியவர், பொருட்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்றுள்ளார்.
அதில் மின்சார கசிவு ஏற்பட்டிருந்த நிலையில், பழனியாண்டி மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று, மின்கசிவு ஏற்படாத வகையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், அதில் மின்வயர் அறுந்து கிடப்பது, சாலையில் பள்ளங்களை மூடி மறைத்து இருப்பதால், பொதுமக்கள் கவமான இருக்க வேண்டும். அதே வேளையில் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு தேங்கிய மழைநீரை போர்கால அடிப்படையில் வெளியேற்றுதல், மின் வயர், மரங்கள் முறிந்து கிடப்பதை அப்புறப்படுத்தி சரி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனுக்குடன் அரசு நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.




