தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மாநகராட்சி ஆணையா் ப்ரியங்கா முன்னிலை வகித்தாா். மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி முகாமைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. ஏற்கெனவே, மனு அளித்தவா்களுக்கு தீா்வாணை வழங்கப்பட்டது.
முகாமில் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:-
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள மொத்தம் 60 வார்டுகளில் மூன்று வார்டுகளில் மட்டுமே வடிகால் இன்னும் அமைக்கப்படவில்லை. இருப்பினும் அந்த வார்டில் தற்போதைக்கு தற்காலிகமாக மழைநீர் வழிந்து செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 10 செ.மீ மழை பெய்தாலும் 2 மணி நேரத்தில் மழைநீர் வழித்தோடி எங்கும் தேங்காத வகையில் 14 வழித்தடங்கள் மூலம் மழைநீர் செல்லக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மழை பெய்தால் தண்ணீர் தேங்குமோ என்ற அச்சம் மாநகர மக்களுக்கு வேண்டாம்.
தூத்துக்குடி மாநகரில் சாலை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இதுவரை 4500 சாலைகள் போடப்பட்டுள்ளது. ராஜாஜி பூங்கா, எம்ஜிஆர் பூங்கா, ரோச் பூங்கா என்று 3 பூங்காக்கள் மட்டுமே இருந்த நிலையில், விளையாட்டு, நடைப்பயிற்சி உள்ளிட்டவைகள் மூலம் பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் 53 பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முத்துநகர் கடற்கரையில் ஸ்கேட்டிங் பயிற்சிக்காக மைதானம் திறக்கப்படாலும், இது போன்ற விளையாட்டுகளில் நம் ஊரை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேசிய அளவிலான போட்டிக்கு செல்வதால், ஜோதி நகர், ரஹமத் நகர் பகுதிகளின் அருகிலே மேலும் ஒரு கூடுதல் ஸ்கேட்டிங் பயிற்சிக்கான மைதானம் அமைக்கப்பட உள்ளது. அதே போல் தூத்துக்குடியில் வில்வித்தை (archery) போட்டி பயிற்ச்சிக்கான தனியாக மைதானம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
வியாபார பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் பேவர் பிளாக் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது . இதில் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது . ஆகவே பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஒரு பகுதியும், வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு பகுதியாகவும் சாலை ஓரங்களை பயன்படுத்த வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
கருத்துகளம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். அதாவது, இதன் நோக்கம் தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிப்பதாகும்.
தூத்துக்குடி மாநகராட்சியின் கால் சென்டர் எண்ணிற்கோ, மேயர், ஆணையரிடம் நேரடியாகவோ பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என யார் வேண்டுமனாலும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். தங்களது கருத்துக்கள் ஆக்கபூர்வமானதாக இருக்கும் பட்சத்தில் அவை உறுதியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.



