• vilasalnews@gmail.com

உறுதியற்ற கட்டிடத்தால் உதிரம் சிந்திய போலீஸ்... தூத்துக்குடியில் நடந்த பரிதாபம்!

  • Share on

தூத்துக்குடியில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த போலீஸ் ஒருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை சேர்ந்தவர் காவலர் ஸ்டாலின் ( 35 ). இவர் காவல்துறையின் ரோந்து வாகனத்தில் டிரைவராக உள்ளார்.


இந்த நிலையில், நேற்று ( 3.11.25 ) தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள ராஜாஜி பூங்கா எதிரில் வாகனத்தை நிறுத்தி விட்டு பாதுகாப்பு பணியில்  இருந்துள்ளார். அங்கே, மணிநகர் 2 வது தெருவில் உள்ள உள்ள தனியார் வணிக வளாக கட்டிடத்தின் அருகே மாலை சுமார் 4 மணி அளவில் நின்று கொண்டிருந்த போது, திடீரென எதிர்பாராத விதமாக வணிக வளாகத்தின் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது.


இதில், தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட காவலர் ஸ்டாலினை அங்கிருந்த சக போலீசார் கொண்டு சென்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


தொடர்ந்து, அங்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் வேறு ஏதும் அசம்பாவிதம் ஏற்பாடாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.


இந்த வணிக வளாகத்தில் பல கடைகளும், அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவதும், பொதுமக்கள் பலரும் அங்கு வந்து செல்லக்கூடிய சூழலில் இது போன்ற விபத்து சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கட்டிடத்தினை முறையாக பராமரிக்காமல் இருந்திருப்பதே இது போன்ற விபத்துக்களுக்கு காரணம். ஆகவே, பொதுமக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத இது போன்ற தூத்துக்குடி மாநகரில் உள்ள வணிக வளாக கட்டிடங்களின் உறுதிதன்மையை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share on

தொடர் கொலை முயற்சி... கண்டு கொள்ளாத காவல்துறை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் குற்றச்சாட்டால் தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடிக்கு புதிய சிஇஓ!

  • Share on