மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பயங்கர காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் உடனே கரைக்கு திரும்ப அழைப்பு விடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. கடல் பகுதியிலும் மாறுபட்ட சூழல் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தற்போது மழை நின்று இயல்பு நிலை திரும்பிய நிலையில், மீண்டும் மீனவர்கள் கடலுக்கு வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில், சென்னை, வானிலை ஆய்வு மையத்திலிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் செய்தியில், 24.10.2025 முதல் 27.10.2025 வரையிலான தேதிகளில், தமிழக கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார்வளைகுடர் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 25.10.2025 அன்று மத்திய வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் 24.10.2025 அன்று மாலைக்குள் கரை திரும்பிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.




