தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் நட்டு அதனை மத்திய அரசின் இணையபக்கத்தில் பதிவு செய்ததில் தூத்துக்குடி மாவட்டம் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.
பள்ளிகளில் 2025 - 26 ஆம் கல்வி ஆண்டில் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல் 2.0 திட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் மரக்கன்று நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் மன்றம் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்தி, மாணவர்கள் மூலம் பள்ளி வளாகத்தில், மாணவர்களின் வீட்டின் அருகில் என பொதுவான இடத்தில் மரக்கன்றுகள் நட வேண்டும். மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் நடுவதை புகைப்படம் எடுத்து மத்திய அரசின் மிசன் லைப் போர்டல் என்கிற இணைய பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்து அதனை பதிவிறக்கம் செய்தால் மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு எண்ணிக்கையில் மரக்கன்று நடுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் கல்வித் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையின் படி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ( பொறுப்பு ) சிதம்பரநாதன், இது சம்பந்தமாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தொடர் அறிவுரை வழங்கி மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வந்தார்.
அதனால் ஒன்றரை லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு நேற்று முன் தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் இலக்கு முடிக்கப்பட்டு மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தை பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கை அடைவதற்கு அனைத்து உதவிகளையும் மேற்கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சாதனைக்கு உதவிய மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ( பொ ) சிதம்பரநாதன் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.




