ஊராட்சி செயலராக பணிபுரிந்த காலத்தில் மோசடி புகாரில் சிக்கி பணியிட மாற்றம் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலருக்கு மீண்டும் அதே கே.குமரெட்டையாபுரம் கிராம ஊராட்சியில் பணியிட மாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தூத்துக்குடி ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக கே.குமரெட்டையாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணப்பெருமாள் இன்று ( 1.9.25 ) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் கே.குமரெட்டையாபுரம் கிராம ஊராட்சியில் 2020 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராக லட்சுமணப்பெருமாளாகிய ஆகிய நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கே.குமரெட்டையாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக ஆனேன்.
பின்னர், அப்போது ஊராட்சி செயலராக இருந்த பா.செந்தில் பிரியா என்பவர் 2019 ஆம் ஆண்டு தனி அலுவலர் காலத்தில் கட்டிட வரைபட அனுமதிக்கு போலி ரசீது மூலம் கட்டண வசூல் செய்து ஊராட்சி மன்ற தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக எனது கவனத்திற்கு வரப்பெற்றது.
பின்னர், எனது ( ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணப்பெருமாள் ) மற்றும் பாதிக்கப்பட்ட அ.வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தாய் உள்ளிட்டோரின் புகாரைத் தொடர்ந்து ஊராட்சி செயலர் பா.செந்தில் பிரியா என்பவர் வெள்ளையமாள்புரம் கிராம ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும், எனது ( ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணப்பெருமாள் ) மற்றும் பாதிக்கப்பட்ட அ.வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தாய் உள்ளிட்டோரின் புகார் மனுக்களின் மீது மண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வு அறிக்கையில் ஊராட்சி செயலர் பா.செந்தில் பிரியா முறைகேடு செய்துள்ளார் என தெரிவித்ததையடுத்து,
2021 ஆம் ஆண்டு அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரான செந்தில் ராஜ், ஊராட்சிக்கும் அரசுக்கும் நிதியிழப்பை ஏற்படுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசிற்கும் அவப்பெயர் ஏற்பட காரணமாக இருந்ததாகவும், கே.குமரெட்டையாபுரம் கிராம ஊராட்சியின் நிர்வாகத்தில் தேவையற்ற குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்தியதாகவும், நிர்வாக நலன் கருதி ஊராட்சி செயலர் பா.செந்தில் பிரியா என்பரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு வட்டார அளவில் கலந்தாய்வு மூலம் மாறுதல் கூட்டம் கடந்த 25.8.25 அன்று நடைபெற்றது.
அதில், கே.குமரெட்டையாபுரம் கிராம ஊராட்சியில், ஊராட்சி செயலராக பணிபுரிந்த காலத்தில் மோசடி புகாரில் சிக்கி வெள்ளையமாள்புரம் கிராம ஊராட்சிக்கு பணியிட மாற்றம் ஆனதோடு, மாவட்ட ஆட்சி தலைவரால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் பா.செந்தில் பிரியா என்பவருக்கு, மீண்டும் கே.குமரெட்டையாபுரம் கிராம ஊராட்சியில் பணியிட மாற்றம் செய்த வட்டார வளர்ச்சி ( கி.ஊ ) அலுவலரின் உத்தரவு கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தனி அலுவலர் காலத்தில் மோசடியில் ஈடுபட்ட கிராம ஊராட்சிக்கு மீண்டும் தனி அலுவலர் காலத்தில் பணியிட மாற்றம் செய்யப்படுவது என்பது ஊழலுக்கு வழி வகுக்கும் என கருதுகிறேன்.
ஆகவே, கே.குமரெட்டையாபுரம் கிராம ஊராட்சியில், ஊராட்சி செயலராக பணிபுரிந்த காலத்தில் மோசடி புகாரில் சிக்கி பணியிட மாற்றம் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர் பா.செந்தில் பிரியா என்பவருக்கு, மீண்டும் அதே கே.குமரெட்டையாபுரம் கிராம ஊராட்சியில் பணியிட மாற்றம் வழங்கி அவரின் ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காத வகையில், அவரின் பணியிட மாற்ற வட்டார வளர்ச்சி ( கி.ஊ ) அலுவலரின் உத்தரவை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி செயலர்களுக்கு கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற வட்டார அளவில் பணியிட மாறுதலுக்கான உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், நாளை ( 2.9.25 ) அன்று காலை 10.30 மணிக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.




