நெல்லையில் மென்பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோரை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின் (வயது 27).
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இதற்கு முன் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். அப்போது, கவினும், சுர்ஜித்தின் அக்காளும் ஒரே பள்ளியில் படித்து வந்ததால் அடிக்கடி பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். கடந்த 27 ஆம் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு வந்த சுர்ஜித், கவினை பேசுவதற்காக அழைத்து சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுர்ஜித்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் எனது அக்காவும், கவினும் பழகி வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழகுவதை நிறுத்துமாறு கவினிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்காததால் வெட்டிக்கொலை செய்தேன் என்று தெரிவித்து இருந்தாா்.
இந்த சூழலில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், உதவி ஆய்வாளர்கள் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தில் கவின் பெற்றோரை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று விசாரணையின் அடிப்படையில் பெண்ணின் தந்தையான உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சரவணன் மருத்துவ பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.




