2026 சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற பிரச்சார பயணம் மூலம் விளாத்திகுளம் வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் பணியில் விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் வருகிற 31 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார். அன்று, இரவு விளாத்திகுளத்தில் அவர் மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
மறுநாள் (ஆக., 1 ஆம் தேதி) காலையில் கோவில்பட்டிக்கு வருகை தரும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து, கோவில்பட்டி தொகுதியில் கடலைமிட்டாய், தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னா் மாலை 4 மணிக்கு தீயணைப்பு நிலையம் முன்பிருந்து பயணிகள் விடுதி வரை அவர் ‘ரோடு ஷோ’ நடத்தி, பொதுமக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பின்னர் ஓட்டப்பிடாரம், தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்கிறார்.

இந்நிலையில், வருகிற 31 ஆம் தேதி விளாத்திகுளத்தில் மக்களை சந்தித்து பிரச்சார பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் பணியில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆலோசனையின் பேரில், விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் வழிகாட்டுதல் படி, விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் வரவேற்பு பதாகைகளை வைத்தல், பொதுமக்களுக்கு அழைப்பு கொடுத்தல் என எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.




