கயத்தார் பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், ஆகவே சிறப்பு கவனம் செலுத்தி உரிய ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அருமைராஜ் என்பவா் மனு அளித்துள்ளாா்.
இது தொடா்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் அருமைராஜ் என்பவா் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் அன்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
கயத்தார் பேரூராட்சியில் தலைவராக சுப்புலட்சுமி என்பவா் இருக்கிறாா். இவா் பெண் என்பதால் இவரின் கணவர் ராஜதுரை மற்றும் அவரது மாமனார் திமுக வின் ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன் ஆகியோரே பேரூராட்சி நிா்வாகத்தில் தலையீடு செய்கின்றனா். தலைவர் சுப்புலட்சுமி அலுவலகத்திற்கு வருவதே கிடையாது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் நலப்பணிகள் என்ற பெயரில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
கயத்தார் பேரூராட்சியில் முறையற்ற குடிநீர் இணைப்புகள் லஞ்சம் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கீகாரமற்ற முறையில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நோக்கில் கட்டிட அனுமதி (PLAN APPROVAL) வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சியில் அனுமதியற்ற திருமணமண்டபம் கட்ட அனுமதி வழங்கி வருவாய் இழப்பு செய்துள்ளார்கள். வார்டு உறுப்பினர்கள் கூட்டமே நடத்தப்படவில்லை. தீர்மானம் என்பது கண்துடைப்பாகவே உள்ளது. இதற்கு பேரூராட்சி செயலாளர் உடந்தையாக செயல்பட்டு உள்ளார்.
பேரூராட்சி தலைவர் அய்யனார்ஊத்து பள்ளியில் பகுதி நேர ஆசிரியர் சம்பளம் வேறு பெற்று நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த நான்காண்டுகள் வரவு செலவினங்களை ஆய்வு செய்தால் பல கோடி நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது தெரியவரும், எனவே சிறப்பு கவனம் செலுத்தி உரிய ஆய்வு செய்து பேரூராட்சி வரவு செலவினங்களை சிறப்பு தணிக்கை செய்து, வருவாய் இழப்பை திரும்ப பெற வேண்டும். அரசு பணத்தை முறைகேடாக செலவு செய்த பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி, அவரது கணவர் ராஜதுரை மற்றும் மாமனார் சின்னபாண்டியன் ஆகியோர் சேர்த்த வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும். இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட பேரூராட்சி செயலாளர் மீது உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




